தெருக்கோடிக்கு வந்த 'சூப்பர் ஸ்டார்'

Update: 2023-08-01 04:38 GMT

7 கார்கள், 25 அறைகள் கொண்ட மாட மாளிகையுடன் ஆடம்பர வாழ்க்கை நடத்திய சூப்பர் ஸ்டார் நடிகர், தெருக்கோடிக்கு வந்த கதை தெரியுமா?

1940-50-களில் இந்தி பட உலகில் மின்னிய நடிகர் பகவான் தாதா. மில் தொழிலாளியான இவர், சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

நடிப்பில் சாதித்த பகவான் தாதா 1938-ல் 'பஹத் கிசான்' என்ற படத்தை டைரக்டு செய்தார். 1951-ம் ஆண்டு 'அல்பேலா' படத்தில் நடித்து இயக்கினார். இது சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து இவர் நடித்து இயக்கிய 'ஜமீலா', 'பகாம் பக்' ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. இவர் தமிழில் 1941-ம் ஆண்டு 'வனமோகினி' என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். நடிகர், இயக்குனர் கடந்து தயாரிப்பாளராகவும் மாறி அதிலும் லாபம் ஈட்டினார். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்த பகவான் தாதாவின் சினிமா பயணம், 1950-களில் சறுக்கலை சந்தித்தது. தொடர் பட தோல்வி, மில் மற்றும் சிட்பண்ட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், வழக்குகளில் தோல்வி என படாதபாடு பட்டார். சொத்துகளும் அழிந்தன.

ஒருகாலத்தில் ராஜ்கபூர், தேவ் ஆனந்த் ஆகியோருக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் நடிகராக வலம் வந்த அவர் இறுதியில் மும்பை தாதர் பகுதியில் சாதாரண வாடகை வீட்டில் வசித்தார். 7 கார்களையும், 25 அறைகள் கொண்ட ஆடம்பர வீட்டையும் விற்று கடனை அடைத்தார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வாழ்ந்தார். பகவான் தாதா, 2002-ம் ஆண்டில் தனது 89 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று அவருக்கு 110-வது பிறந்தநாள் ஆகும். சினிமா ஒருவரை உச்சாணி கொம்பில் ஏற்றிவைக்கவும் செய்யும், அதே சினிமா எவ்வளவு பெரிய ஆளையும் தெருக்கோடிக்கும் கொண்டு வந்து விடும் என்பதற்கு உதாரணம் பகவான் தாதா வாழ்க்கை.

Tags:    

மேலும் செய்திகள்