'பாகுபலி' பட புரொமோஷனுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை - இயக்குநர் ராஜமவுலி

'பாகுபலி’ படத்திற்கு புரோமோஷன் செய்ய நாங்கள் ஜீரோ பட்ஜெட் திட்டமிட்டோம் என இயக்குநர் ராஜமவுலி கூறியிருக்கிறார்.

Update: 2024-05-09 09:23 GMT

தென்னிந்திய சினிமா உலகில் பான் இந்தியா என்ற தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் 'பாகுபலி'க்கு முக்கிய இடம் உண்டு. இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த 2015ல் வெளியானது. இதன் இரண்டாம் பாகமும் 2017ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது. 

இப்போது 'பாகுபலி' படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில் உருவாகி இருக்கிறது. இந்த மாதம் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற டைட்டிலோடு வெளியாக இருக்கிறது. இதில் 'பாகுபலி' படத்தின் முதல் இரண்டு பாகங்களின் கதைக்கு முன்பு என்ன நடந்தது என்பது இந்த அனிமேஷன் தொடரில் காட்டப்பட இருக்கிறது.

இதற்கான விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் ராஜமவுலி கலந்து கொண்டு பேசினார். "'பாகுபலி' படம் உருவான இடம் ஹைதராபாத் என்பதால், இந்த இடம் என் மனதிற்கு இன்னும் நெருக்கமானது. 'பாகுபலி' படத்தின் புதிய அத்தியாயத்தை இங்கு வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 'பாகுபலி'யின் உலகம் இன்னும் பெரிதாக உள்ளது. மகிழ்மதியின் பழம்பெரும் போர்வீரர்கள் ஒன்றுபடுவதால், ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்" என்றார்.

மேலும், "'பாகுபலி' படத்தை உருவாக்கிய பின்பு அதன் புரோமோஷன்களுக்கு ஜீரோ பட்ஜெட் என்பதை முடிவு செய்தோம். பேப்பர், வெப்சைட், போஸ்டர் என எந்தவிதமான விளம்பரங்களும் நாங்கள் செய்யவில்லை. அதற்கு பதிலாக நாங்கள் படம் தொடர்பாக பல வீடியோக்களை உருவாக்கினோம். டிஜிட்டல் போஸ்டர்களை உருவாக்கினோம். கதாபாத்திரங்கள் மற்றும் மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டோம், இதனால், எங்கள் படத்திற்கு விளம்பரம் கிடைத்தது. நாங்கள் இதைச் செய்ய பணம் செலவழிக்கவில்லை. எங்கள் மூளையையும் நேரத்தையும் பயன்படுத்தினோம்" என்றார்.

திரையில் 'பாகுபலி' படத்தை ரசிகர்கள் கண்டு ரசித்த நிலையில், அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அனிமேஷன் வடிவில் தயாரிக்கப்பட்டு 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' வெளிவரவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்