உற்சாகமாக வாழ்க்கையை தொடங்க தினமும் மூச்சு பயிற்சி, தியானம் - நடிகை சமந்தா
தினமும் காலை 5.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவேன் என்று சமந்தா கூறினார்.;
சென்னை,
நடிகை சமந்தா அதிகாலையில் எழுந்ததும் அன்றைய தினம் உற்சாகமாக வாழ்க்கையை தொடங்க மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் தினமும் காலை 5.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவேன். சூரிய உதயத்தில் சில நிமிடங்கள் இருப்பேன். அதன்பிறகு மூச்சு பயிற்சி செய்வேன். 25 நிமிடங்கள் தியானம் செய்வேன். உற்சாகமாக அன்றைய தினத்தை தொடங்க இதன் மூலம் எனக்கு அதிகமான சக்தி கிடைக்கிறது'' என்றார்.
தமிழ், தெலுங்கில் 10 ஆண்டுகளாக நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தாவுக்கு இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.
காதலித்து திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயில் சிக்கி படங்களில் நடிப்பதையும் தற்காலிகமாக நிறுத்தினார். இந்த நோய் உடலில் நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளை வலுவிழக்க செய்யும். மேலும் இது தாங்க முடியாத வலியையும் வீக்கத்தையும் உண்டாக்கும்.
நோய் பாதிப்பு குறித்து முன்னதாக அவர் கூறியதாவது, மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக எனது உடல்நிலை மோசமாகிவிட்டது. எந்த அளவுக்கு என்றால் என்னுடைய தசைகள் பயங்கர வலியை கொடுத்தன. எலும்புகள் பலவீனமாகி நான் சோர்ந்துவிட்டேன். சில நாட்களில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு சிரமமாக இருந்தது. கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்பட்டது. இந்த தலைவலியால் எந்த செயலையும் செய்ய முடியாது. இவ்வாறு கூறியிருந்தார்.
தற்போது சிகிச்சை பெற்று குணம் அடைந்து மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.