எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை: முதல்-அமைச்சருக்கு இளையராஜா நன்றி
நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ என பெயரிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்புக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.