நடிகர் விஜய்யுடன் படம் பண்ண தயார் - கமல்ஹாசன்

நடிகர் விஜய்யுடன் படம் பண்ண ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2022-05-29 14:37 GMT

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஸ்வஸ்திகா கிருஷ்ணன் சேம்பன் வினோத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எனவே படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புரமோஷனுக்காக உலகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றி வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது, செய்தியாளர் ஒருவர், 'விக்ரம்' படத்தின் மூன்றாவது பாகத்தில் தளபதி விஜய்யை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'விக்ரம் 3' படத்திற்காக ஏற்கெனவே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என்று சூர்யாவை மறைமுகமாக கூறினார். அதே நேரத்தில் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று கூறினார்.

ஏற்கெனவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசனின் இந்த பதிலால் விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்