சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய ரத்னகுமார்... லியோ வெற்றி விழாவிற்கு பிறகு எடுத்த திடீர் முடிவு..!

லியோ படத்தின் வெற்றி விழாவில் கழுகு குறித்து ரத்னகுமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Update: 2023-11-02 14:02 GMT

Image Credits : Twitter.com/@MrRathna

சென்னை,

'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ரத்னகுமார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் 'குலு குலு' திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்திற்கும் இவர் வசனங்கள் எழுதியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்த விழாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றி விழாவை நிபந்தனைகளுடன் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.

அதன்படி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'லியோ' படத்தின் வெற்றி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் லியோ படத்தின் அனுபவம் குறித்து பேசினர். இந்த விழாவில் ரத்னகுமார் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினார். அப்போது அவர், 'கழுகு எவ்வளவு உயரம் பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும்' என்று பேசினார். இவரின் இந்த பேச்சு ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'நான் என் அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து சற்று விலகுகிறேன்' என்று அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்