'வேட்டையன்' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
சென்னை,
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். 'ஹண்டர் வண்டார்' பாடலும் வெளியாகி வைரலானது.
இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியானது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, நடிகர் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், நடிகை அபிராமி மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், நாளை மாலை படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது
இந்த நிலையில், வேட்டையன் படத்துக்கு தணிக்கைக் குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'வேட்டையன்' படத்தின் நீளம் 2 மணி 43 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. "வேட்டையன்" திரைப்படம், அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.