திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினிகாந்த்
தற்போது 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினி இப்படத்தை தொடர்ந்து, தனது 171-வது படமாக கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை கைதி, லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன், சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். 'தேவா' என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
தற்போது 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த ரஜினிகாந்த் வேட்டையன் படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
'வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளிலும் வேட்டையன் படத்திற்கு முன்பதிவு நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தர்பாருக்கு பிறகு முழுவதுமாக போலீசாக நடிப்பது வித்தியாசமாக உள்ளது,' என்றார். மேலும், செய்தியாளரின் திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினிகாந்த் 'மன்னித்துவிடுங்கள்' என்று கூறி சென்றார்.