டி.ராஜேந்தர் நலமுடன் உள்ளார்; சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கை
டி. ராஜேந்தர் முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார் என சிம்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
திரைப்பட டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு 'திடீர்' உடல் நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். டி.ராஜேந்தர் உடல்நிலையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றுக் குள் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை தனி விமானம் மூலம் அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், நடிகரும் டி ராஜேந்தரின் மூத்த மகனுமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு கூறியிருப்பதாவது: எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர்தர சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி" எனத்தெரிவித்துள்ளார்.