அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் 'பிரேமலு' பட நடிகர்
அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.;
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'ரங்கூன்' திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் 30 நாள் தொடர்ச்சியாக நடந்தது. மீதி படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்நிலையில் 'பிரேமலு' மலையாள படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஷியாம் மோகன் (ஜேகே ஆதி) தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அமரன்' படத்தில் இணைந்து உள்ளார். அவர் ஒரு முக்கிய சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார்.
இதை தொடர்ந்து 'அமரன்' படம் கூடுதல் பலம் பெற்று வருகிறது. இந்த படத்தில் எதிரிகளுடன் சிவகார்த்திகேயன் மோதும் துப்பாக்கி சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.