'பொன்னியின் செல்வன் -2' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்
'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் முதல் பாடலான 'அக நக' என்ற பாடல் வருகிற 20-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரில் வாளோடு நிற்கும் திரிஷா முன்பு நடிகர் கார்த்தி கண்ணை கட்டிக் கொண்டு மண்டியிட்டு நிற்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.