எனக்கு மறக்க முடியாத பண்டிகை பொங்கல் - நடிகை சுருதிஹாசன்
சிரஞ்சீவியுடன் நடித்த ‘வால்டேர் வீரய்யா', பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி' ஆகிய இரண்டு தெலுங்கு படங்கள் ஒன்றாக ரிலீசாகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை சுருதிஹாசன்.;
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியான சுருதிஹாசன், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அதிக படங்களில் நடித்துக் கொண்டு இருந்தபோதே திடீரென சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியவருக்கு, மீண்டும் நடிக்க வந்ததும் படங்கள் குவியத்தான் செய்திருக்கின்றன.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியான சுருதிஹாசன், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகையில் மூத்த நடிகர்களான சிரஞ்சீவியுடன் நடித்த 'வால்டேர் வீரய்யா', பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த 'வீர சிம்ஹா ரெட்டி' ஆகிய இரண்டு தெலுங்கு படங்கள் ஒன்றாக ரிலீசாகும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அவரது பேட்டியில் இருந்து...
கேள்வி:- இந்த பொங்கலுக்கு நீங்கள் நடித்த இரண்டு படங்கள் வெளியாவது எப்படி இருக்கிறது?
பதில்:- முதலில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது அன்பார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் வீட்டில் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்.
குடும்பத்தோடு பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவேன். எனக்கு மறக்க முடியாத பண்டிகை பொங்கல். பண்டிகை என்றாலே எனக்கு மகிழ்ச்சிதான். அதுவும் நான் நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் பொங்கலில் வெளியாவது, இரட்டிப்பு மகிழ்ச்சி. அதுவும் இரண்டு பெரிய கதாநாயகர்களோடு நடித்த படங்கள் வெளியாவது ஆசீர்வாதம் என்றுதான் நினைக்கிறேன்.
கேள்வி:- நீங்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம் இருக்குமா?
பதில்:- பதற்றம் என்பது 'செட்'டில் பணியாற்றும்போது மட்டும்தான். 'எக்ஸ்பிரஷன்' சரியாக வந்திருக்கிறதா?, வசனம் நன்றாக சொன்னேனா இல்லையா என்ற 'டென்ஷன்' இருக்கும். வெற்றி தோல்வி என்பதெல்லாம் ரசிகர்களின் கையில்தான். அந்த விஷயத்தில் நான் பதற்றம் அடையமாட்டேன்.
கேள்வி:- மூத்த நடிகர்கள் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொள்கிறீர்களே, இதனால் இளம் நாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு பறிபோகும் என்ற வருத்தம் இல்லையா?
பதில்:- கதை மற்றும் எனது கதாபாத்திரத்தை மட்டுமே நான் பார்ப்பேன். நடிகர்களின் வயதை பார்ப்பது இல்லை. முதலில் இருந்து சினிமாவை சினிமாவாக பார்த்து அங்கீகரிப்பது எனக்கு பழக்கம். அடுத்தவர்கள் நினைப்பது பற்றி கவலை இல்லை.
கேள்வி:- 'பான்' இந்தியா படங்கள் 'டிரண்டு' குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- உண்மையில் நானே ஒரு பான்-இந்தியன். (சிரித்தபடியே) என் அம்மா (சரிகா) மும்பை. அப்பா (கமல்ஹாசன்) தமிழ்நாடு. எங்கள் டைனிங் டேபிள் மீது மகாராஷ்டிரா மீன் கறி, சப்பாத்தி, சாம்பார், ரைஸ் எல்லாம் இருக்கும். ஒரு பிராப்பர் இந்தியன் ஹோம் எங்களுடைய வீடு. மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து தமிழ் எழுத, படிக்க கற்றுக் கொண்டார் என் அம்மா. அப்பாவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் இப்படி பல மொழிகள் தெரியும். பான் இந்தியா கான்செப்ட் என்பது, என் மனதில் சிறு வயது முதலே இருக்கிறது. அனைவரும் கோலிவுட், பாலிவுட், டாலிவுட் என்று சொன்னால், அப்பா 'இந்தியன் சினிமா' என்றுதான் சொல்வார்.
நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். ஆனால் இந்தி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானேன். அங்கிருந்து தெலுங்கு, அதன்பிறகு தமிழில் அறிமுகமானேன். சொல்ல வேண்டும் என்றால் எங்கள் வீடு ஒரு 'பான் இந்தியா'. நானும் ஒரு 'பான் இந்தியா ஸ்டார்'. இப்போது எல்லோரும் 'பான் இந்தியா' படம் என்றெல்லாம் சினிமாவை பார்ப்பதும் பாசிட்டிவான விஷயம்தான்.