பார்த்திபன் மனம்கவர்ந்த 'ஹவுஸ்புல்' திரையரங்கு
தேவி திரையரங்கில், தனது ‘ஹவுஸ்புல்' படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை இதோ நம்மோடு பார்த்திபன் பகிர்ந்துகொள்கிறார்.;
'ஹவுஸ் புல்' எனது திரை உலக வாழ்கையில் மிக முக்கியமான படம். முழுப் படமும் ஒரு திரையரங்கில் நடக்கும்படி கதை இருப்பதால், அதற்கு ஏற்ற சரியான திரையரங்கை தேடினோம். அப்போது மதுரையில் உள்ள புராதான திரையரங்கான தேவி தியேட்டர் இக்கதைகான சரியான களமாக இருந்தது. 1999-ம் ஆண்டு 'ஹவுஸ் புல்' படத்தை ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், இந்து-இஸ்லாமியர் மோதலாக மாறி நிறைய பேர் பாதிக்கப்பட்டனர்.
நான் எப்போதுமே சினிமாவை ஒரு சமூக அக்கறை உள்ள ஒரு நூதனமான சாதனமாகத் தான் பார்ப்பேன். இந்த குண்டுவெடிப்பு மூலம் இத்தனை அப்பாவி மக்களை கொன்றவன் நிச்சயமாக ஒரு இந்துவாகவோ, முஸ்ஸிமாகவோ, கிறிஸ்த்தவனாகவோ இருக்க முடியாது. நிச்சயம் அவன் ஒரு மிருகமாகத்தான் இருக்க முடியும் என்று சொன்னேன்.
அந்த சமயத்தில் 2 வாரத்துக்குள் அந்த படத்தை முடித்துவிடலாம் என்று இருந்தேன். ஆனால் 7 வாரம் அந்த தியேட்டரை லீசுக்கு எடுத்து படத்தை எடுத்து முடித்தேன். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
ஒவ்வொரு நாளும் ஒரு சுவராஸ்சியமான அனுபவமாக இருந்தது. அந்த தியேட்டர் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம், தியேட்டருக்குள் ஒருத்தன் வெடிகுண்டு வைக்கிறான், உள்ளே படம் பார்த்து ரசித்து கொண்டு இருக்கும் மக்களைப் பாதுகாப்பாக, பதற்றமில்லாமல் வெளியே அழைத்துச் செல்லும் தியேட்டர் உரிமையாளர் கதாபாத்திரம்தான் நான் ஏற்றிருந்தேன்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிக அற்புதமாக இருக்கும், கதையில் அந்த திரையரங்க உரிமையாளர் திரையரங்குக்குள் இருக்கும் அனைவரையும் காப்பாற்றி பாதுகாப்பாக வெளியேற்றிவிடுவார். அச்சமயம் திரையரங்கு உள்ளே இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கும். சிறிதும் யோசிக்காமல் உள்ளே சென்று அந்த குழந்தையை காப்பாற்றச் செல்வார். அப்போது திரையில் ஒரு குழந்தை அவரை பார்த்து சிரிக்கும். இவரும் சிரித்தப்படி குண்டு வெடிப்பில் பலியாவார்.
திரையரங்கிலும், பின்னர் இதனை காட்சிபடுத்த சென்னை பிரசாத் ஸ்டூடியோவிலும் செட் போட்டு இருந்தேன். ஒரு மினியேச்சரும் செய்தேன். தேவி போன்ற தியேட்டர்களில் வளர்ந்த தமிழ் சினிமா தான் இன்று புது பரிணாமம் அடைந்திருக்கிறது. தேவி தியேட்டர் நினைவுகளோடு பார்த்திபன்.