உண்மை தெரியாமல் பேசிய பவன் கல்யாணுக்கு நாசர் பதிலடி...! "வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் இது"

”வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் இது” என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-27 13:06 GMT

சென்னை,

சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி.

இப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசும் போது,

தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புது விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்' என்று பவன் கல்யாண் கூறி இருந்தார்.

பவன் கல்யாணின் இந்த பேச்சு வைரலான நிலையில், அதற்கு பதிலளித்து நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பிற மொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன்.

இப்போ நாம் பான் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பிறமொழியை சேர்ந்த நடிகர், நடிகைகளும் இங்கு நடிக்க வைக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த மாதிரி நிலையில், யாரும் பிறமொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்றக்கூடாது என்கிற தீர்மானத்தை போட மாட்டார்கள்.

தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருதி, தமிழ்நாட்டுக்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இங்கு சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

பிற மொழிகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பெருமைமிக்க ஒரு திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் இது. சாவித்ரி, வாணி ஜெயராம் என ஏராளமானோர் இங்கு வந்து பிரபலமாகி இருக்கின்றனர். இந்த தவறான தகவலை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம் அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம்" என கூறி உள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்