குர்பானி என்று ஓர் இந்திப் படம். 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி வெளியானது. பெரோஸ்கான், அம்ஜத்கான், ஜீனத் அமன் நடித்து இருந்தனர். படத்தில் இடம்பெற்ற டிஸ்கோ நடனம் அப்போது பிரபலமாகப் பேசப்பட்டது. படத்தின் இசை, பாடல்கள் மொழி மாறுபாடு இன்றி அனைவர் செவிகளையும் ஈர்த்தன. வடக்கே மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும் படம் சக்கைப் போடு போட்டது.
கோவை நாஸ் தியேட்டரில் 132 நாட்கள் ஓடியது. தியேட்டர் முன்பு, நடிகை ஜீனத் அமனின் 3 கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் 60 அடி உயர ஜீனத் அமனின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், மாலை அணிவித்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.
சென்னை சத்தியம் தியேட்டரிலும் 100 நாட்களுக்கு மேலாக ஓடியது. இதனால் குர்பானி படத்திற்கு வெற்றிவிழா கொண்டாட ஏற்பாடுகள் நடந்தன. விழாவில் பங்கேற்க அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., குர்பானி படத்தின் நாயகர் பெரோஸ்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். ஆனால் நடிகர் பெரோஸ்கான் வரவில்லை.
கோவையிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிவிழாவுக்கு ஏற்பாடுகள் நடந்தன. அதற்காக கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கோவை வந்தார். அங்குள்ள அரசு பயணியர் விடுதியில் தங்கியிருந்தார்.
காலை 10 மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கே நேரு விளையாட்டு அரங்கம் ரசிகர்களால் குலுங்கத் தொடங்கிவிட்டது.
அந்தப் பகுதியில் எங்கும் எளிதில் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.
மணி 11 ஆனது... 12 ஆனது... ஆனால் விழா மேடைக்கு எம்.ஜி.ஆரும் வரவில்லை. நடிகர் பெரோஸ்கானும் வரவில்லை.
ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் துவண்டுபோனார்கள். கூச்சல் போடத் தொடங்கினார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள்.
மதியம் 1 மணி ஆனது...
விழாக்குழுவில் ஒருவர் மைக் முன் வந்தார், "முக்கியமான வேலை வந்துவிட்டதால், விழா நாயகர்கள் வரமுடியாமல் போனது. அதற்காக வருந்துகிறோம்!" என்றார்.
அதைக் கேட்டதும் கொதிப்படைந்த ரசிகர்கள், ரகளையில் ஈடுபட்டனர். கற்களை தூக்கி வீசினார்கள். அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
வெற்றிவிழா இவ்வாறு கலவரத்தில் முடியவே அடுத்து, இந்தி நடிகர் பெரோஸ்கான் என்ன ஆனார்? பயணியர் விடுதியில் தங்கியிருந்த முதல்-அமைச்சர்எம்.ஜி.ஆர். எங்கு போனார்? என்ற கேள்விகள் எழுந்தன.
நடிகர் பெரோஸ்கான், சென்னை விழாவிற்கும் வரவில்லை. கோவைக்கும் வரவில்லை. அவரது படவிழாவிற்கு அவரே வராதபோது, நாம் எதற்கு? என்றபடி எம்.ஜி.ஆர். சென்னை திரும்பிவிட்டார் என்று அப்போது சொல்லப்பட்டது.
எது எப்படியோ? ரசிகர்கள் ஏமாந்து போனதுமட்டும் உண்மை. விடுவார்களா அவர்கள்? விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டன் அதில் ஒருவர் இருக்கத்தானே செய்வார்?
பிரபலங்களை அழைத்து வருவதாகக் கூறி ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக வக்கீல் ஒருவர் கோவை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் ஆஜராகும்படி இந்தி நடிகர் பெரோஸ்கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை. 4-வது முறை சம்மன் அனுப்பிய பின்னரே அவர் கோவை வந்து கோர்ட்டில் ஆஜரானார்.
கூண்டில் ஏறிய நடிகர் பெரோஸ்கான், தான் ஒரு நடிகர் என்பதாலும், படப்பிடிப்பு தொடர்பாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியது இருந்ததாலும் கோவையில் நடந்த விழாவிற்கு வரமுடியாமல் போனது என்று நீதிபதி முன்னிலையில் விளக்கம் அளித்தார். அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு நாஸ் தியேட்டரைப் பலரும் குர்பானி தியேட்டர் என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.
இப்போதும்கூட கோவையைச் சேர்ந்த 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதை குர்பானி தியேட்டர் என்றுதான் அழைத்து வருகிறார்களாம்!