மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த 21 வயதான சினி ஷெட்டி பட்டம் வென்றார்!

கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி, "பெமினா மிஸ்-இந்தியா வேர்ல்ட் - 2022" வெற்றியாளராக ஆனார்.;

Update:2022-07-04 13:09 IST

மும்பை,

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் வி.எல்.சி.சி 'பெமினா மிஸ்-இந்தியா' இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

அதில் கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி, "பெமினா மிஸ்-இந்தியா வேர்ல்ட் - 2022" வெற்றியாளராக ஆனார்.

ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத் 2-வது இடமும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான் 3-வது இடமும் பிடித்தனர்.

மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022இல், தனது காந்தம், வசீகரம், சகிப்புத்தன்மை மற்றும் அழகு ஆகியவற்றால் அரங்கில் எங்கள் இதயங்களை சினி ஷெட்டி கொள்ளையடித்தார்.

மேலும், மிஸ் வேர்ல்ட்(உலக அழகி) போட்டியில், அவர் நாட்டை பெருமைப்படுத்துவார் என்று நம்புகிறோம்." என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மும்பையில் பிறந்த 21 வயதான சினிஷெட்டி, கணக்கியல் மற்றும் நிதித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் பரதநாட்டிய நடனக் கலைஞரும் கூட.

ஷெட்டியின் வெற்றி கர்நாடகாவுக்கு மற்றொரு பெருமை சேர்த்துள்ளது. இவருக்கு முன் லாரா தத்தா, சாரா ஜேன் டயஸ், சந்தியா சிப், நஃபிசா ஜோசப், ரேகா ஹண்டே, லைமரைனா டி'சவுசா என பல அழகிகளை நாட்டிற்கு கர்நாடகா வழங்கியிருக்கிறது.

மிஸ்-இந்தியா வேர்ல்ட் - 2022க்காக, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் திறமையான அழகிகளைக் கண்டறிய தேசிய அளவில், காணொலி மூலம் ஆடிஷன்கள் நடத்தப்பட்டது. இறுதியில், நேர்காணல் சுற்றுகள் உட்பட பல சுற்று போட்டிகளுக்கு பின், 31 மாநில வெற்றியாளர்கள் இறுதிப்போட்டிக்கு பட்டியலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்