'மறக்குமா நெஞ்சம்' விமர்சனம் - ரக்சன் வெள்ளித்திரையில் ஜெயித்தாரா..?

நாயகன் ரக்சனுக்கு மாணவன், வேலைக்கு போகும் இளைஞன் என இரண்டு பரிமாணங்கள்.

Update: 2024-02-05 23:53 GMT

நாயகன் ரக்சன் பள்ளியில் தன்னுடன் படிக்கும் சக மாணவி மெலினாவை ஒருதலையாக காதலிக்கிறார். பள்ளி ஆண்டு விழாவில் காதலை வெளிப்படுத்த நினைக்கும்போது எதிர்பாராத விதமாக விழா ரத்தாகிறது.

எல்லோரும் பிரிகிறார்கள். வளர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழும் சூழலில் ரக்ஷன் படித்த காலத்தில் அந்த பள்ளியில் நடந்த தேர்வில் விதிமீறல் நடந்ததாக போட்டி பள்ளி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறது. அந்த வழக்கில் பல வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுத கோர்ட்டு உத்தரவிடுகிறது. இதையடுத்து பல ஊர்களில், பல பொறுப்புகளில் இருக்கும் பழைய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்கள்.

பல வருடமாக தன் காதலியை தேடிவரும் ரக்சன் அந்த சந்திப்பில் மீண்டும் காதலியிடம் காதலை சொல்ல முயற்சி செய்கிறார். அது நடந்ததா? தேர்வு எழுதினார்களா? என்பது மீதி கதை.

நாயகன் ரக்சனுக்கு மாணவன், வேலைக்கு போகும் இளைஞன் என இரண்டு பரிமாணங்கள். அதை அவரும் நடிப்பில் வேறுபடுத்தி காண்பித்துள்ளார். காதல் கைகூடாமல் போகும் சூழ்நிலையில் விரக்தியை காண்பிக்கும் காட்சியில் பளிச்சிடுகிறார்.

நாயகி மெலினா அதிகம் பேசாமலேயே அசத்தியிருக்கிறார். காதலின் வலியையும், காத்திருத்தலின் இறுக்கத்தையும் தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு முகபாவங்களிலேயே பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களாக வரும் தீனா, ப்ராங்ஸ்டர் ராகுல் என அனைவரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதம். முனீஸ்காந்த் உடற்பயிற்சி ஆசிரியராகவும், மனைவியை இழந்த கணவனாகவும் நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

சச்சின் வாரியர் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசையும் பரவாயில்லை. பள்ளிக்கூடத்தையும், குமரி மாவட்ட அழகையும் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி. காதலை இன்னும் உணர்வுப்பூர்வமாக சொல்லி இருந்தால் பேசப்பட்டு இருக்கும்.

யதார்த்தமான காட்சிகள், நட்பின் பலம், பள்ளி பருவ காதல் என்று பல வகையிலும் பாராட்டும்படியான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ராகோ யோகேந்திரன்.

Tags:    

மேலும் செய்திகள்