தமிழ் இயக்குநர் மீது நடிகை சவுமியா பாலியல் குற்றச்சாட்டு

மகளைப் போன்று எண்ணுவதாகக் கூறிய இயக்குநரே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2024-09-05 12:37 GMT

மலையாளத் திரைத் துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் இதில் திரைத் துறையைச் சேர்ந்த மிகப்பெரும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து மலையாளத் திரைத் துறையில் பணிபுரியும் பெண்கள், நடிகைகள் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என கோரப்பட்டது.

மலையாளத் திரைத் துறையில் பல்வேறு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மலையாள நடிகையான சவுமியா, தமிழ் இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை சவுமியா, "எனக்கு அப்போது 18 வயது, நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். என் பெற்றோருக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. அந்த நேரத்தில் தான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குநர் ஒருவர் தன்னை படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி தனது தந்தையிடம் பேசினார். இதற்காக பெரிய தொகையையும் இயக்குநர் சார்பில் தனது தந்தையிடம் வழங்கப்பட்டதால், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநரும், அவரின் மனைவியும் என்னை மிகவுன் கனிவுடன் நடத்தினர். அவர்கள் இல்லத்திற்கு என்னை அழைத்துச் செல்வார்கள். அங்கு உணவு, பழரசம் போன்றவை வழங்கி அவரின் மனைவி என்னை கவனித்துக்கொள்வார்.

ஒருநாள், அவரின் மனைவி வீட்டில் இல்லாதபோது இயக்குநர் என்னருகில் வந்து, மகளைப் போன்று எண்ணுவதாகக் குறிப்பிட்டு எனக்கு முத்தமிட்டார். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவறிழைத்தவள் போன்ற உணர்வை அந்த நாள் எனக்கு ஏற்படுத்தியது. இது குறித்து நண்பர்களிடம் கூறவும் நான் தயங்கினேன். நான் கல்லூரி படித்த காலத்தில் ஒரு வருடத்திற்கு மேல் இது நடந்தது. அப்போது நான் இயக்குநரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன் '' எனக் கூறினார்.

''மகளாக தன்னை நினைப்பதாகக் கூறியவர், தன்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். என் மனநிலையை முழுவதுமாக சிதைத்துவிட்டார். அப்படம் முடியும் வரை பாலியல் அடிமை போன்று நடத்தப்பட்டதாகவே உணர்ந்தேன்'' என சவுமியா கூறினார்.

பாதுகாப்பு கருதி பொதுவெளியில் இயக்குநரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், சிறப்பு விசாரணைக் குழுவிடம் புகாரளிக்கும்போது முழு விவரங்களை அளிக்கவுள்ளதாகவும் சவுமியா தெரிவித்தார்.

மலையாளத் திரைத்துறையில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்தன..கேரள மாநில திரைப்பட அகாடமியின் தலைவா் இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நடிகா் சித்திக் ஆகியோா் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து தங்கள் பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்