தமிழில் ஆரோகணம், அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் ஏராளமான படங்களில் நடித்தும் இருக்கிறார். 4 வருடங்களுக்கு பிறகு தற்போது "ஆர் யூ ஓகே பேபி'' என்ற படம் மூலம் மீண்டும் டைரக்டராகி உள்ளார். இதில் சமுத்திரக்கனி, மிஷ்கின், அபிராமி, அசோக், பாவல் நவநீதன், ரோபோ சங்கர், முல்லை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, "தொலைக்காட்சியில் நான் நடத்திய நிகழ்ச்சிகளில் இருந்து கிடைத்த அனுபவங்கள் மூலம் இந்த படத்தை இயக்கி இருக்கிறேன். இது ஒரு குழந்தையை பற்றிய படம். ஒரு குற்றம் நடக்கிறது. அதன் மீதான சமூகம், ஊடகங்கள், சட்டம் ஆகியவற்றின் பிரதிபலிப்புகள் என்ன? எப்படி அந்த குற்றத்தை அணுகுகிறார்கள் என்பது படமாக இருக்கும்.
இது சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சமுத்திரக்கனி கதையை படித்த மறுநாளே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருப்பது பெரிய பலமாக அமைந்துள்ளது. அவரது பின்னணி இசைகோர்ப்பு பணியின் அற்புதத்தை நேரில் பார்த்து வியந்தேன்'' என்றார்.