தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பறிப்பு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி

தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.

Update: 2022-08-17 08:30 GMT

மும்பை

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.

அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக அவரது காதலி லீனா மரியாவிடமும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுகேஷ் சந்திரசேகர் நடிகையின் விமானம், அவரது ஓட்டல் மற்றும் உணவுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது.

சுகேஷ் சந்திரசேகர் மீது 32 கிரிமினல் வழக்குகள் உள்ளதால், பல மாநில போலீசார் மற்றும் மூன்று மத்திய ஏஜென்சிகள் – சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரி ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தொழிலதிபரை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி என கூறப்பட்டு உள்ளது.குற்றபத்திரிகையில்ரூ . 215 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸை ஒரு கூட்டாளியாக அமலாக்கத்துறை குறிப்பிட்டு உள்ளது. சுகேஷ் சந்திரசேகர் ஒரு மிரட்டி பணம் பறிப்பவர் என்பதும், அவர் மிரட்டி பணம் பறித்த பணத்தின் பயனாளி என்பதை ஜாக்குலின் அறிந்திருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்