'இது திரைத்துறைக்கு நல்லதல்ல' - அன்னபூரணி படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து

ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு அன்னபூரணி படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.

Update: 2024-01-16 09:12 GMT

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அன்னபூரணி'. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.

ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் அன்னபூரணி பட சர்ச்சை குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். அவர், 'சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம்' என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குனர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும்.

ஆனால், தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடியில் இருந்து நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்' என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்