நான் எப்போது செருப்பில்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ... - விஜய் ஆண்டனி
செருப்பு அணியாதபோது மனதுக்கு அமைதி கிடைத்தது என்று விஜய் ஆண்டனி கூறினார்.;
சென்னை,
இசையமைப்பாளராக இருந்து கதாநாயனாக உயர்ந்த விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் 2' படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
சமீபகாலமாக விஜய் ஆண்டனி காலில் செருப்பு அணிவது இல்லை. சென்னையில் நடந்த விழாக்களில் செருப்பு அணியாமலேயே பங்கேற்றார். தற்போது ஐதாராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியொன்றிலும் செருப்பு அணியாமலேயே கலந்து கொண்டார்.
இதுகுறித்து விஜய் ஆண்டனியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து விஜய் ஆண்டனி கூறும்போது, "நான் சில நாட்களுக்கு முன் செருப்பு அணியாமல் சுற்றித்திரிந்தேன். அந்த அனுபவம் எனக்கு நன்றாக இருந்தது போல் தோன்றியது.
செருப்பு அணியாதபோது மனதுக்கு அமைதி கிடைத்தது. ஆரோக்கியத்துக்கும் அது நல்லதுதான். அது மட்டுமின்றி நமக்குள் தன்னம்பிக்கையை கூட இது வளர்க்கும். நான் எப்போது செருப்பில்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அந்த சமயத்தில் இருந்து எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.