ரஜினிகாந்தை தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கிறாரா சிவராஜ்குமார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ரஜினிகாந்தை தொடர்ந்து கமல்ஹாசன் படத்திலும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.;
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.
தனுசின் 'கேப்டன் மில்லர்' படத்திலும் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.
இதற்கிடையில் கன்னடத்தில் எம்.ஜி.சீனிவாஸ் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்த 'கோஸ்ட்' படம் வருகிற 19-ந்தேதி திரைக்கு வருகிறது. பான் இந்தியா படமாக தயாராகியிருக்கும் இந்த படத்தின் புரோமோஷன் விழா, மும்பையில் நடந்தது.
இதில் உலகநாயகன் கமல்ஹாசன் பங்கேற்று, சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். கமல்ஹாசன் வாழ்த்தால் மகிழ்ச்சியடைந்து போன சிவராஜ்குமார், கமல்ஹாசனுடன் தான் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.
'நான் கமல்ஹாசனின் ரசிகர்' என பல மேடைகளில் குறிப்பிட்டு பேசியிருக்கும் சிவராஜ்குமார், 'கமல்ஹாசனை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். ரஜினிகாந்தை தொடர்ந்து கமல்ஹாசன் படத்திலும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அது சாத்தியமாக வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.