'ஐசி 814' வெப் தொடர் விவகாரம் - மத்திய அரசிடம் நெட்பிளிக்ஸ் விளக்கம்

‘ஐசி 814’ காந்தஹாா் ஹைஜேக் வெப் தொடர் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தில் நெட்பிளிக்ஸ் விளக்கமளித்துள்ளது.

Update: 2024-09-03 09:22 GMT

கடந்த 1999ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து டில்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர். அங்கு விமானப் பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர். அதன்பேரில், 3 பயங்கரவாதிகளும் ஒப்படைக்கப்பட்ட பிறகு, விமானப் பயணிகளை விடுத்தனர்.


இந்த சம்பவத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, 'ஐசி 814 ' எனும் வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் வர்மா, நஸ்ருதின் ஷா, பங்கஜ் கபூர், அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்ஸா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு இந்துக்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அமைப்பு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், போலி பெயா்களுடன் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புக் கிளம்பியது.

சர்ச்சையை கிளப்பிய 'ஐசி 814' எனும் வெப் தொடர் குறித்து விளக்கமளிக்கக் கோரி நெட்பிளிக்ஸின் இந்திய தலைமை நிர்வாகிக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

இதையடுத்து, மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சக அதிகாரிகள் முன் இன்று நெட்பிளிக்ஸ் நிர்வாகி ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து, மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், ' நம் நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமையில்லை.இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்கு எப்போதும் மதிப்பளிக்கப்பட வேண்டும். இதுபோன்று தவறாக சித்தரிக்கும் முன், சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசு இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையாளுகிறது' என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்