சினிமாவில் நான் ஒரு தோல்வியுற்ற நடிகன்; ஆனால், என் மகன் - 'ஸ்டார்' பட இயக்குநரின் தந்தை நெகிழ்ச்சி

தன் மகன் இளன் இயக்குநரானது குறித்துப் பெருமிதத்துடன் பேசியுள்ளார் நடிகரும், புகைப்படக் கலைஞருமான ‘ராஜா ராணி' பாண்டியன்.

Update: 2024-05-04 09:46 GMT

சினிமாவில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவை விடாமல் துரத்தும் கதாபாத்திரத்தில் கவின் நடித்திருக்கிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் மே 10-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் இளன், அவரின் தந்தை 'ராஜா ராணி' பாண்டியன், கவின் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் தன் மகன் இளன் இயக்குநரானது குறித்து பெருமிதத்துடன் பேசியுள்ளார் நடிகரும், புகைப்பட கலைஞருமான 'ராஜா ராணி' பாண்டியன். இயக்குநர் இளன் பற்றி பேசியவர், `மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்' என்பது வள்ளுவரின் வாக்கு. இந்த குறளுக்கேற்ப என்னைப் பெருமைப்படுத்தியுள்ளார் என் மகன் இளன்.

சினிமாவில் நான் ஒரு தோல்வியுற்ற நடிகன். நிறைய கஷ்டங்களையும், அவமானங்களையும் அனுபவித்திருக்கிறேன். அதனால், நான் என் மகனை சினிமாவில் சாதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் பாரதியார் வேஷமெல்லாம் போட்டு நடிக்க வைத்தேன். அவனும் சினிமா கனவுடனே வளர்ந்தான். ஆனால், பட்டப்படிப்பை முடித்துவிட்டுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் இருந்தேன். பிறகு, 'இரண்டு ஆண்டுகள் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள், நான் இயக்குநராகி விடுவேன்' என்றார் இளன். மூன்று ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்துக் கடுமையாக உழைத்தார். இன்று இயக்குநராகி கவினை வைத்து 'ஸ்டார்' படத்தை இயக்கியுள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எனது கனவை என் மகன் நிறைவேற்றியுள்ளார். நிச்சயம் இப்படம் வெற்றிப்படமாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன்" என்று பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.

'ராஜா ராணி' படத்தில் நடித்ததுக் குறித்துப் பேசியவர், "புகைப்படக்காரராக இருந்த நான் நடிகனாக வேண்டும் என்ற கனவுடன் பயணித்தேன். அட்லியின் 'ராஜா ராணி' படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 70,000 ரூபாய் சம்பளம் தருவதாக புகைப்படம் எடுக்கும் வேலை வந்தது. நடிப்புதான் முக்கியம் என்று 'ராஜா ராணி' படத்தில் வெறும் ரூ.3,500 சம்பளத்திற்கு நடித்தேன். அன்று குறும்படத்தில் நடிப்பவர்களுக்கே ரூ.5,000 சம்பளம் கொடுத்தார்கள். குறைவான சம்பளம் என்றாலும் நடிகராக வேண்டும் என்ற என் கனவிற்காக நடித்தேன். அதன் பிறகு படங்களின் வாய்ப்புகள் வந்தது" என்று பேசியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்