அதிக லாபம் பார்த்த படங்கள்

Update:2023-05-26 09:15 IST

தமிழ் சினிமாவில் இந்த வருடம் ஜனவரியில் இருந்து இப்போதுவரை 80-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்து குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் லாபமும், அதிகமான படங்கள் தோல்வியும் அடைந்துள்ளன. மணிரத்னம் இயக்கிய `பொன்னியின் செல்வன் 2,' விஜய்யின் `வாரிசு', அஜித்குமாரின் `துணிவு', தனுசின் `வாத்தி', சிம்புவின் `பத்துதல', வெற்றி மாறன் இயக்கிய `விடுதலை' ஆகிய படங்கள் நல்ல வசூல் பார்த்தன. இவை அதிக பட்ஜெட்டில் தயாரானவை.

இவற்றுக்கு மத்தியில் பெரிய படங்களுக்கு இணையாக அதிக லாபம் பார்த்த சிறுபட்ஜெட் படங்களும் உள்ளன. `லவ் டுடே' இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதில் பிரபலமில்லாத பிரதீப் ரங்க நாதன் கதாநாயகனாக அறிமுகமானார். சுமார் ரூ.9 கோடியில் தயாராகி எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து சினிமா உலகை ஆச்சரியப்படுத்தியது.

சிறு பட்ஜெட்டில் வந்த `டாடா' படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. இதில் கதாநாயகனாக நடித்த கவினுக்கு திருப்புமுனை படமாகவும் அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றியால் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளன. சம்பளத்தையும் அவர் உயர்த்தி உள்ளார்.

சசிகுமார் நடிப்பில் குறைந்த செலவில் வந்த `அயோத்தி' படத்துக்கு ஆரம்பத்தில் தியேட்டரில் கூட்டம் இல்லை. பிறகு படிப்படியாக அதிகமானோர் வர ஆரம்பித்து வசூல் குவிக்கத் தொடங்கியது. மத நல்லிணக்கம், மனித நேயத்தை வலியுறுத்தும் சிறந்த படமாக இதை ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆர்.ஜே.பாலாஜியின் `ரன் பேபி ரன்', பாபி சிம்ஹாவின் `வசந்த முல்லை' படங்கள் கவனம் பெற்றன. `திருவின் குரல்' படம் மாற்றுத்திறனாளியாக வந்த அருள்நிதியின் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தில் காட்டியது. சர்ச்சை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான `பர்ஹானா' படம் ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.

அதிக வசூல் பார்த்த சிறு பட்ஜெட் படங்களில் சமீபத்தில் வந்த `குட்நைட்' படமும் இணைந்துள்ளது. இதில் சூர்யாவின் `ஜெய்பீம்' படத்தில் நடித்து பிரபலமான மணிகண்டன் கதாநாயகனாக நடித்து இருந்தார். குறட்டையால் எழும் பிரச்சினைகளை ரசிக்கும்படி நகைச்சுவையாக சொல்லி இருந்தனர். இன்னும் சில பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் ஓரளவு லாபம் பார்த்துள்ளன.

வசூலில் சாதனை படைத்த படங்களை பார்க்கும்போது பெரிய கதாநாயகன், பெரிய இயக்குனர், அதிக பட்ஜெட் போன்றவை வெற்றிக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்று சொன்னால் இன்னொரு பக்கம் எந்த பிரபலங்களும் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்களும் ஜெயிக்கும் என்பதை சிறிய பட்ஜெட் படங் களின் வெற்றி நிரூபித்து உள்ளது.

எந்தக் கதையாக இருந்தாலும் ரசிக்கும் படியாக சொல்லும்போது அது வெற்றிப்படமாக அமைந்துவிடுகின்றன. இனி வரும் நாட்களிலும் பல உச்ச நடிகர்களின் படங்களும், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சிறு பட்ஜெட் படங்களும் வெளிவர இருக்கிறது. அப்படி வெளியாகி அந்த படங்கள் வசூலில் சாதனை படைக்கும்போது இவ்வாண்டு கோடம்பாக்கத்திற்கு கோலாகலமான ஆண்டாக அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்