கோல்டன் குளோப் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ராக்வெல் வெல்ஷ் 82 வயதில் உயிரிழப்பு
ராக்வெல் வெல்ஷ் தனது 82-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.;
வாஷிங்டன்,
ஹாலிவுட் திரையுலகில் 1960-70 காலகட்டங்களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் ராக்வெல் வெல்ஷ். இவர் தனது 82-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
தனது கதாபாத்திரங்கள் மூலம் ஹாலிவுட்டில் கவர்ச்சியின் எல்லைக்கு புதிய வரையறைகளை உருவாக்கிய ராக்வெல் வெல்ஷ், 1973-ம் ஆண்டு 'த த்ரீ மஸ்கட்டீர்ஸ்' படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருதை வென்றார். இன்று வரை பல்வேறு ஹாலிவுட் நடிகைகளுக்கு இவரது கதாபாத்திரங்கள் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளன.
இவர் நடித்த பெண்டாஸ்டிக் வாயேஜ், ஒன் மில்லியன் பி.சி., மைரா பிரெக்கின்ரிட்ஜ் உள்ளிட்ட படங்கள் ராக்வெல்-க்கு பெரும் புகழை தேடித் தந்ததோடு, அந்த படங்களில் அவர் அணிந்த உடைகளும் பேசுபொருளாகின. கடந்த 2010-ம் ஆண்டு இவர் எழுதிய சுயசரிதை புத்தகத்தில், "நான் நிச்சயமாக என் வேலையில் லாபத்திற்காக என் உடல் மற்றும் கவர்ச்சியை பயன்படுத்தினேன். ஆனால் அனைத்திற்கும் வரம்புகள் வைத்திருந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராக்வெல் வெல்ஷ்க்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு சர்வதேச அளவில் திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.