'கில்லி' ரீ-ரிலீஸ் - நடிகர் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி பதிவு
முத்துப்பாண்டியை நேசித்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து 2004 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
எப்போது பார்த்தாலும் சலிக்காத கதைக்களம், விஜய், பிரகாஷ் ராஜின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அதிரடியான பாடல்கள் என படத்தின் சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜுனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.
கில்லி திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி இப்படம் சமீபத்தில் வெளியானது. கில்லி மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,
முத்துப்பாண்டியை நேசித்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.உங்கள் அன்பால் என் இதயத்தை தொட்டுவிட்டீர்கள். அதைபோல டைரக்டர் தரணி, தயாரிப்பாளர் ரத்னம், என் அன்புக்குரிய விஜய், என் செல்லம் திரிஷா மற்றும் படக்குழுவினருக்கும் நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.