தமிழ் படங்களில் பிறமொழி நடிகர்கள்

Update:2023-06-30 12:16 IST

சினிமாவுக்கு மொழி இல்லை என்றாலும் பல ஆண்டுகளாக நடிகர்கள் தங்கள் தாய்மொழிப் படங்களில் மட்டுமே திறமை காண்பித்து வந்தார்கள். சில நடிகர்கள் பிறமொழி படங்களில் நடிக்க வந்தாலும் மொழி பிரச்சினை, சிண்டிகேட் சிஸ்டம் போன்ற காரணங்களால் ஓரம்கட்டப்பட்டனர்.

ஆனால், சினிமா `டிஜிட்டல்' என்ற புதிய பரிமாணத்தில் பயணிக்க ஆரம்பித்து பான் இந்தியா படங்கள் வந்த பிறகு, அந்த எல்லை பிரச்சினை காணாமல் போய் நடிகர்கள் அனைத்து மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர்கள் தமிழ் படங்களில் நடிப்பதை தங்கள் விருப்ப தேர்வாக வைத்துள்ளனர். அவர்களில் சில நடிகர்கள் விவரம்:-

சஞ்சய் தத்: இந்தியில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் வாரிசு நடிகரான சஞ்சய்தத் சமீபத்தில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த `கே.ஜி.எப்' படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றார். தற்போது விஜய்யின் `லியோ' படத்தில் சஞ்சய்தத் நடித்து தமிழுக்கு வருகிறார்.

ராணா டகுபதி: தெலுங்கில் பலமான சினிமா பின்னணி கொண்ட ராணா, தமிழில் `ஆரம்பம்' படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். தொடர்ந்து, `இஞ்சி இடுப்பழகி', `பெங்களூர் நாட்கள்', `என்னை நோக்கி பாயும் தோட்டா', `காடன்' உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

துல்கர் சல்மான்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த துல்கர் சல்மான், தமிழில் `வாயைமூடி பேசவும்' படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய `ஓ காதல் கண்மணி', `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', `ஹே சினாமிகா' போன்ற படங்களில் நாயகனாக நடித்தார்.

நாக சைதன்யா: தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கிய `கஸ்டடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து நேரடி தமிழ் படங்களில் நடிக்கும் யோசனையில் இருக்கிறாராம்.

பகத் பாசில்: இந்திய சினிமாவில் திறமையான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் பகத் பாசில் `வேலைக்காரன்' படத்திலிருந்து தமிழில் நடிக்க ஆரம்பித்தார். `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் இவருடைய நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து, கமல்ஹாசனின் `விக்ரம்', பகத் பாசிலை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. தற்போது உதயநிதி, வடிவேலுவுடன் `மாமன்னன்' படத்திலும் நடித்துள்ளார்.

அக்ஷய் குமார்: பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் `2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் பட உலகில் அறிமுகமானார். தற்போது சூர்யா நடித்த `சூரரைப்போற்று' இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.

நானி: தெலுங்கு நடிகர் என்ற அடையாளத்துடன் வலம் வரும் நானி `வெப்பம்' படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து `நான் ஈ', `நீதானே என் பொன்வசந்தம்', `ஆஹா கல்யாணம்', `நிமிர்ந்து நில்' என படங்கள் செய்தார்.

சந்தீப் கிஷன்: தெலுங்கில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த சந்தீப் கிஷன், தற்போது தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நிவின் பாலி: மலையாள நடிகரான நிவின்பாலி, `நேரம்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது `கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில் `ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா: தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா தமிழில் `நோட்டா' படத்தில் நடித்துள்ளார்.

இவர்களை தவிர, தமிழ் சினிமாவில் நடிக்கும் பிறமொழி நடிகர்கள் பட்டியலில் சுதீப், டொவினோ தாமஸ், `கேஜிஎப்' வில்லன் அவினாஷ், `பாகுபலி' வில்லன் பிரபாகரன் உட்பட பலர் இருக்கிறார்கள்.

பிறமொழி நடிகர்களின் மாறுபட்ட நடிப்புக்கு தமிழ் ரசிகர்களும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்