திரைப்பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் தற்போது இசை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. மேற்கத்திய கலாசாரத்தை பின்னணியாக கொண்டு பாடல்கள் உருவாகி வரும் சூழலில் நாட்டுப்புற கலைகளையும் சொந்த மண்ணின் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக வெளியான தனி இசை பாடலை கார்த்தி பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து நடிகர் கார்த்தி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது நாட்டுப்புற கலைகளையும் கலைஞர்களையும் கொண்டாட வேண்டும். தற்போது அவர்கள் கொண்டாடப்படும் நிலையை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உணர முடிகிறது.
பல தலைமுறைகளாக கடந்து வரும் நம் முன்னோர்களின் சொத்தான பாரம்பரிய கலை வடிவத்தை இப்போதும் தொடர்ந்து பயிற்சி செய்து வரும் கலைஞர்களை பார்த்து தலை வணங்குகிறேன்'' என்று கூறியுள்ளார்.