பிரபல நடிகைகள் பெயரில் போலி கொரோனா சான்றிதழ்கள்...அவசரத்தில் நடந்து விட்டது என பதில்
நடிகைகள் ஜூஹி சாவ்லா, மகிமா சவுத்ரி பெயரில் போலி கொரோனா சான்றிதழ்கள் வெளியான விவகாரத்தில் குஜராத் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.;
காந்திநகர்,
குஜராத் சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, பாலிவுட் பிரபலங்கள் பெயரில் போலி கொரோனா சான்றிதழ்கள் வெளியான விவகாரம் பற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி எழுப்பியது.
இதன்படி, நடிகைகள் ஜூஹி சாவ்லா, ஜெயா பச்சன் மற்றும் மகிமா சவுத்ரி ஆகியோர் குஜராத்தில் இல்லாதபோது, ஜுனாகட் மாவட்டத்தில் இருப்பது போன்று அவர்களது பெயரில் போலியாக கொரோனா சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது பற்றி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. இம்ரான் கெடாவாலா கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி சுகாதார மந்திரி ருஷிகேஷ் பட்டேல் அவையில் கூறும்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில், அடையாள அட்டைகளை காண்பிக்காமல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடத்தப்பட்டது.
இதில், அடையாள அட்டைகள் இல்லாத பிச்சைக்காரர்கள் அல்லது புலம்பெயர்ந்தோரும் சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, இந்த பெயர்களை கொண்ட நபர்கள் வந்தபோது, முகாமில் இருந்த அதிகாரி அவசர கதியில் பெயர்களை எழுதி உள்ளார் என பதிலாக தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி முறையான விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். அதன்பேரில் ஆலோசகர்கள் அடங்கிய குழு தொடக்க கட்ட ஆய்வு நடத்தி உள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள் என கூறியுள்ளார்.