பகத் பாசிலின் அடுத்த படம் - முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா
தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள மலையாளப் படம் 'ஆவேஷம்';
சென்னை,
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து தமிழில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
இந்நிலையில் பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இயக்குனர் விபின் தாஸ் ஐதராபாத்தில் எஸ்.ஜே. சூர்யாவை சந்தித்து படம் குறித்து பேசியுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.
தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள மலையாளப் படம் 'ஆவேஷம்' . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 11-ம் தேதி திரைக்கு வருகிறது.