சென்னை ஐகோர்ட்டு வளாகம் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு - பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேர் கைது
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனான விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாத்துரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைகாரன் போன்ற படங்கள் வந்துள்ளன. இதில் 2016-ல் வெளியான பிச்சைக்காரன் படம் பெரிய வெற்றி பெற்றது. நாயகியாக சட்னா டைட்டஸ் நடித்து இருந்தார். சசி இயக்கினார்.
இந்த படத்தின் வெற்றியால் விஜய் ஆண்டனியின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. தெலுங்கில் பிச்சக்காடு என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வசூல் குவித்தது.
இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படம் விஜய் ஆண்டனி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அவரே இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் இப்படம் வெளியானதால் தற்போதும் 2 மொழிகளிலும் ரிலிஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனுமதி பெறாமல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தாக கூறப்படுகிறது.