'இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம்'- லோகேஷிடம் ஓப்பனாக பேசிய உபேந்திரா
'கூலி' படத்தில் இணைந்துள்ளது குறித்து நேர்காணல் ஒன்றில் உபேந்திரா பேசினார்.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக 'கூலி' உருவாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர்.
ரஜினியுடன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது. இதில், மலையாள நடிகர் சவுபின் சாஹிர் தயாளாகவும், சுருதிஹாசன் பிரீத்தியாகவும், உபேந்திரா காளிஷாவாகவும், சத்யராஜ் ராஜசேகராகவும், நாகார்ஜுனா சைமனாகவும், ரஜினிகாந்த் தேவா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், 'கூலி' படத்தில் இணைந்துள்ளது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள உபேந்திரா, லோகேஷ் கனகராஜிடம் இருந்து அழைப்பு வந்த நிலையில், கூலி படக்கதையின் ஒரு வரியை மட்டும் சொன்னதாகவும், அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று லோகேஷிடம் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் ரஜினியின் மிகப்பெரிய ரசிகனாக இருப்பதால், அவர் வரும் காட்சியில் அவர் அருகில் இருந்தால் மட்டும் போதும் என்று கூறியதாகவும் உபேந்திரா தெரிவித்துள்ளார்.