நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தகமாக வெளியிடப்படும் - போனி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தகமாக வெளியாக உள்ளதாக அவரது கணவர் போனிகபூர் அறிவித்துள்ளார்.;
மும்பை,
தமிழ் நாட்டில் பிறந்து இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஸ்ரீதேவி. 1967-ல் கந்தன் கருணை என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் முதன் முதலில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பின்னர் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
ஸ்ரீதேவி அவர்கள் 1978 ஆம் ஆண்டு இந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் இந்தி திரைப்படம் எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான "ஹிம்மத்வாலா" ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், இந்தி திரையுலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
1980ஆம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றார்.
தமிழில் வெளியான மூன்றாம் பிறை இந்தியில் சத்மா பெயரில் ரீமேக் ஆனது. இது ஸ்ரீதேவியின் நடிப்பு பாலிவுட்டினரை மிகவும் கவர்ந்தது. அங்குள்ள பத்திரிகைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டியிருந்தது.
300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுமட்டுமல்லாது பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி அவர் இறுதியாக 'இங்கிலீஷ் விங்கிலிஷ்' ' மாம்' ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாத்ரூம் தொட்டிக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவரது வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வர இருக்கிறது. இந்த புத்தகம் 'ஸ்ரீதேவி- தி லைப் ஆப் எ லெஜண்ட்' என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார் என அவரது கணவரும், தயாரிப்பாருமான போனிகபூர் அறிவித்துள்ளார்.
இது குறித்து போனிகபூர் கூறியதாவது:-
ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி. தனது கலையை அவர் திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தார். அதேசமயம், அவர் தனிமை விரும்பியாகவும் இருந்தார். தீரஜ்குமாரை ஸ்ரீதேவி தனது குடும்பத்தில் ஒருவராகவும் கருதினார். அவர் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். ஸ்ரீதேவியின் அசாதாரண வாழ்க்கையை அவர் புத்தகமாக எழுதுகிறார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று கூறினார்.
இது குறித்து தீரஜ் கூறும் போது, மதிப்பிற்குரிய வெஸ்ட்லாண்ட் புக்ஸ் எனது அறிமுக புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய லிட்டரரி ஏஜெண்ட் அனிஷ் சண்டி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். போனி கபூர் மற்றும் அவரது குடும்பம், லதா மற்றும் சஞ்சய் ராமஸ்வாமி, சூர்யகலா, மகேஷ்வரி மற்றும் கார்த்திக், ரீனா மற்றும் சந்தீப் மார்வா ஆகியோர் எனக்கு அளித்துள்ள ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறினார்.