தமிழ் சினிமாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்

Update: 2023-10-20 02:00 GMT

அன்றும், இன்றும் இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்வது தமிழ் சினிமா. இந்திய மொழிகளில் அதிக அளவில் தமிழ் படங்கள் தயாரிக்கப்படுகிறது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் மிகச் சிறந்த நடிகர்கள் தங்கள் மொழியில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் தமிழ் மொழியில் நடிப்பதை பெருமையாகவே கருதுகிறார்கள்.

ஏனெனில், தமிழ் சினிமாவின் படைப்புலகம் அத் தகையது. காதல், வாழ்வியல், குடும்பம், சமூகம் என பல தளங்களில் உருவாகும் கதைகள் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமில்லாமல் சமூக மாற்றத்துக்கும் வகை செய்கின்றன.

தற்போது `பான் இந்தியா சினிமா' அடிப்படையில் சினிமாவுக்கான எல்லைகள் விரிவடைந்து இருப்பதால், பல மொழி நடிகர்கள் தமிழ் மொழியில் நடிப்பதற்கு ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் சிலர் பற்றிய விவரம்:-

இந்தியாவின் உச்ச நடிகரான அமிதாப் பச்சன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் தயாரித்த `உல்லாசம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில வருடங்களுக்கு முன் எஸ்.ஜே.சூர்யாவுடன் `உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தனர். தற்போது ரஜினிகாந்தின் 170-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஆஜானுபாகுவான நடிகர்களில் ஒருவரான சஞ்சய்தத் `கே.ஜி.எப்-2' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்போது விஜய்யின் `லியோ' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித்தின் `விடாமுயற்சி' படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள்.

இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானாபடேகர் பல ஆண்டுகளுக்கு முன் `பொம்மலாட்டம்' படத்தில் நடித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரஜினியின் `காலா' படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அக்ஷய்குமார், `2.0' படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து இருந்தார். இவர் தமிழ், இந்தியில் வெளியான `கலாட்டா கல்யாணம்' படத்திலும் தனுசுடன் நடித்துள்ளார்.

சினிமாவில் குறுகிய காலத்தில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக மாறிய நவாசுதீன் சித்திக், தமிழில் ரஜினியின் `பேட்ட' படத்தின் மூலம் தனது கணக்கை தொடங்கி இருந்தார்.

ஐஸ்வர்யாராய் `இருவர்', `ஜீன்ஸ்', `கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', `ராவணன்', `எந்திரன்', `பொன்னியின் செல்வன்' ஆகிய தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.

கங்கனா ரணாவத் ஏற்கனவே ஜெயம்ரவியின் `தாம்தூம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, `தலைவி' படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த `சந்திரமுகி 2' படத்திலும் நடித்துள்ளார்.

இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் திஷா பதானி, `கங்குவா' படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். ரஜினியின் `காலா', அஜித்குமாருடன் `வலிமை' படங்களில் ஹூமா குரோஷி நடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ஜாக்கி ஷெராப், சாயாஜி ஷிண்டே, அதுல் குல்கர்னி, மனோஜ் பாஜ்பாய், யோக்ஜேப்பி, தபு, கஜோல், ஷில்பா ஷெட்டி, மல்லிகா ஷெராவத் என பலர் உள்ளனர்.

சினிமாவுக்கு மொழி இல்லை என்பார்கள். அந்த வகையில் சிறந்த பாலிவுட் நடிகர்கள், தமிழ் மொழியில் நடிப்பதை தமிழ் ரசிகர்கள் வரவேற்கிறார்கள் என்பதை அந்தப் படங்களின் வெற்றி நிரூபணம் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்