நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் புளூ டிக்; தனக்கே உரிய பாணியில் எலான் மஸ்கிற்கு நன்றி

நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் புளூ டிக் வழங்கியதற்காக எலான் மஸ்கிற்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

Update: 2023-04-22 07:05 GMT

புனே,

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தன்வசப்படுத்தினார். மஸ்க், டுவிட்டர் உரிமையாளரான பின்பு, தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர்.

இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிபடுத்தி கொள்ள ஏதுவாக, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் சரி என குறிக்கும் வகையில் நீலநிற டிக் (புளூ டிக்) குறியீடு இருக்கும்.

இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருந்த இந்த திட்டம் பின்னர் தள்ளி போனது.

இந்த சூழலில், டுவிட்டரில் புளூ டிக்கை பெறுவதற்கு ஏற்ற வகையில் சந்தா தொகையை அந்நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வ முறையில் அறிமுகம் செய்தது.

இதுவரை குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இந்த கட்டணம் செலுத்தி டுவிட்டரில் சந்தாதாரர்களாக ஆவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்திய பயனாளர்களும் ஒரு மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.

இதன்படி, சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்களை கொண்ட சந்தாதாரர்களுக்கு புளூ டிக் அடையாளம் அவரது முகப்பு பக்கத்தில் கிடைக்க பெறும்.

இதற்கு முன்பு டுவிட்டர் பயனாளர்கள் இதனை பெறுவதற்கு தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆனால், கட்டணம் செலுத்தி, ஆய்வு செய்த மொபைல் போன் எண்ணுக்கு தற்போது தானாகவே புளூ டிக் கிடைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்த டுவிட்டர் கணக்கு அங்கீகாரம் பெற்றது என மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

இந்த புளூ டிக் முகப்பு பக்கம் பெற்ற பயனாளர்களுக்கு, கூடுதல் அம்சங்களாக சில வாக்குறுதிகளை டுவிட்டர் நிறுவனம் அளிக்கின்றது. குறைவான விளம்பரங்கள் (50% அளவு), நீண்ட பதிவுகள், அதிக நேரம் கொண்ட வீடியோக்கள், வரவிருக்கிற புதிய அம்சங்களை விரைவாக பெற்று கொள்வது ஆகியவை உறுதியளிக்கப்படுகின்றன.

வீடியோக்கள் முழு அளவில் எச்.டி. துல்லியத்துடன் பகிர முடியும். பதிவை வெளியிட்ட 30 நிமிடங்களில் 5 முறை எடிட் செய்யும் வசதியும் புளூ டிக் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பயனாளர் ரத்து செய்யும்வரை, விதிகளுக்கு உட்பட்டு தானாகவே சேவையை புதுப்பித்து கொள்ளும் வசதியும் கொண்டது.

இதேபோன்று, ஸ்பாம் உள்ளிட்ட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் டுவிட் பதிவுகளில், இந்த பயனாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதன்படி ஏப்ரல் 20-ந்தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டுவிட்டர் எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

அவர்களில் நடிகர் அமிதாப் பச்சனும் ஒருவர் ஆவார். இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் புளூ டிக் மீண்டும் அவருக்கு கிடைத்து உள்ளது. இதற்கு தனக்கே உரிய பாணியில் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், து சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த் என 1994-ம் ஆண்டு வெளிவந்த மோஹ்ரா படத்தில் இடம் பெற்ற பாடலை சற்று மாற்றி உள்ளார்.

அந்த பதிவில், எலான் மஸ்க்கை சகோதரர் என குறிப்பிட்டு, உங்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எனது பெயருக்கு முன்னால் நீல தாமரை (புளூ டிக்) சேர்க்கப்பட்டு உள்ளது. நான் தற்போது என்ன கூறுவது சகோதரரே? ஒரு பாட்டு பாட வேண்டும் என தோன்றுகிறது. நீங்கள் அதனை கவனிக்கிறீர்களா? சரி கவனியுங்கள் என தெரிவித்து, து சீஸ் படி ஹை மஸ்க் மஸ்க்... து சீஸ் படி ஹை மஸ்க் என பதிவிட்டு உள்ளார்.

அவர், புளூ டிக் நீக்கப்பட்டதும் அதனை திரும்ப தர வேண்டும் என்று அப்போது கோரிக்கை விட்டார். இதற்காக, கைகளை கூப்பிய எமோஜி ஒன்றை வெளியிட்டு நீல தாமரையை திரும்ப தரவேண்டும் என்றும் வேண்டுகோளாக கேட்டார். இந்த சேவைக்காக முன்பே பணம் செலுத்தி விட்டேன் எனவும் அவர் பதிவிட்டார். இந்த நிலையில், அவருக்கு புளூ டிக் திரும்ப கிடைத்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்