நடிகர் சிவராஜ்குமாருக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க கோரிக்கை
நடிகர் சிவராஜ்குமார், தற்போது காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, கர்நாடாகாவில் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக அவரை ஆதரித்து சிவராஜ்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடியும்வரை சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் கோரிக்கை வைத்துள்ளது.
பாஜக ஓபிசி மோர்ச்சா பிரிவின் கர்நாடக மாநிலத் தலைவர் ரகு, எழுதியிருந்த கடிதத்தில், "கர்நாடாகாவில் ஒரு முக்கிய நபராக இருக்கும் சிவராஜ்குமார், தற்போது காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சினிமா மூலம் மக்கள் மத்தியில் பொதுவான ஆளுமை என்ற பெயரை பெற்றுள்ளார். ஜனநாயக முறையில், அவரது உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.
அதே சமயம், தேர்தல் நேரத்தில் தேவையற்ற ஆதாயங்கள் அல்லது செல்வாக்கைத் தடுப்பது மற்றும் சமநிலையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அவரது குறிப்பிடத்தக்க செல்வாக்கு மற்றும் பிரபலத்தை கருத்தில் கொண்டு, திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவைகளில் தேர்தல் முடியும்வரை சிவராஜ்குமார் நடித்த படங்கள், விளம்பரங்களை ஒளிப்பரப்பபடுவதை தடை செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.