மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி
நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,
சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர் (வயது 39). திரைப்பட தயாரிப்பாளரான இவர் 'நட்புனா என்னானு தெரியுமா', 'முருங்கைக்காய் சிப்ஸ்' போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இவர் பிரபல டி.வி. நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையைச் சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்த்தின் நிர்வாகி பாலாஜி கபா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ரவீந்தர் ரூ.200 கோடி மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக கூறி தன்னிடம் ரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ரவீந்தர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எழும்பூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, ரவீந்தரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.