விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் மிலன் மரணம்
அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் மிலன் காலமானார்.;
சென்னை,
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்கான ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கலை இயக்குநர் மிலனுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மிலன் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கலை இயக்குநர் மிலன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பில்லா, வீரம், வேதாளம், துணிவு, வேலாயுதம், அண்ணாத்த, பத்து தல உள்ளிட்ட படங்களிலும் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய மிலன் 120க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் பணியாற்றி உள்ளார்.
சமீப காலமாக சினிமா பிரபலங்கள் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்து வருவது அதிகரித்து வரும் நிலையில், இன்று மிலன் உயிரிழந்து இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.