இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய ஏ.ஆர்.ரகுமான் - நன்றி தெரிவித்த லைட்மேன் சங்கம்
இனி வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாதபடி பாதுகாப்பாக பணி செய்வோம் என லைட்மேன் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
லைட்மேன்களின் குடும்பங்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லைட்மேன் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பாகவும், எங்கள் சங்க உறுப்பினர்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, 13.01.2024 அன்று நடந்த செயற்குழுக் கூட்டத்திலும் 14.01.2024 அன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்கள் சங்க உறுப்பினர் குமார், அவர்கள் 18-01-2023 அன்று நடந்த படப்பிடிப்பு தளத்தில் கோடாவில் தவறி விழுந்து அகால மரணம் அடைந்தார்.
இறந்தவரின் குடும்பத்தாருக்கு நீங்கள் ரூ.2,00,000/-ம் மற்றும் மாதாமாதம் குடும்ப செலவிற்கு ரூ.20,000/-ம், கொடுத்து உதவி செய்து வருகிறீர்கள். அதற்கு எங்கள் சங்கத்தின் சார்பாகவும் இறந்த உறுப்பினர் குடும்பத்தின் சார்பாகவும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், நீங்கள் எங்கள் சங்க உறுப்பினர்களின் நலனை காக்கவும், வாழ்வாதாரத்தை காக்கவும் எங்கள் சங்க உறுப்பினர்கள் மீது அக்கறைக் கொண்டு இதுவரை உலக சினிமாவில் யாரும் செய்திடாத உதவியை நீங்கள் எங்கள் சங்க லைட்மேன்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தி அதில் நிதி திரட்டி அதற்கு Savelightmanfund என்று பெயர்சூட்டி ஒரு வலைத்தளமும் உருவாக்கி தந்ததற்கும் அதில் உறுப்பினர்களுக்கு உதவி செய்ததற்கும் எங்கள் சங்கத்தின் சார்பாகவும், எங்கள் சங்க உறுப்பினர்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் Savelightmanfund மூலம் எங்கள் சங்க உறுப்பினர் சண்முகம், அவர் 26-12-2023 அன்று நடந்த படப்பிடிப்பு தளத்தில் கோடாவில் அல்லது மின்சாரம் பாய்ந்து அகால மரணம் அடைந்தார். அவரின் குடும்பத்தாருக்கு ரூ.5,00,000/-ம், மற்றும் அதில் பலத்த அடிப்பட்ட ரஞ்சித்குமார் அவர்களுக்கு ரூபாய்.1,00,000/-ம் உதவி செய்தீர்கள். அதற்கு எங்கள் சங்கமும் இறந்தவரின் குடும்பத்தாரும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பெற்றிருக்கிறோம். மேலும், எங்கள் சங்கத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் உதவி கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த திரு.செந்தில்வேலவன் அவர்களுக்கும் எங்கள் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நீங்கள் செய்யும் உதவிக்கு மனமார்ந்த நன்றியும் இனி வரும் காலங்களில் இந்த விபத்துகள் ஏற்படாதபடி தொழில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பாக பணி செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இருந்த போதிலும் எதிர்பாராத விதத்தில் நடைப்பெறும் இந்த மாதிரி அசம்பாவிதத்திற்கு எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். எங்கள் சங்கமும், இறந்த உறுப்பினரின் குடும்பத்தாரும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பெற்றிருக்கிறோம். நீங்கள் செய்த உதவிக்கு கோடான கோடி நன்றி சொன்னாலும் ஈடாகாது."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.