எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த மதுரை வீரன் திரைப்படம் 1956-ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தை தயாரித்த லேனா செட்டியாரும், அரிராம் சேட்டும் நண்பர்கள். அந்தப் படத்துக்கு பொருளாதார ரீதியாகவும் அரிராம் சேட் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து இருந்தார். அப்போதே முக்கூடலில் உள்ள தனது வீட்டில் சினிமா புரஜெக்டர் வைத்து, அதில் புதிய சினிமா படங்களை திரையிட்டுப் பார்க்க, மினி தியேட்டர் வசதியையும் அவர் ஏற்படுத்தி வைத்திருந்தார். மதுரை வீரன் சினிமா, பிரிவியூ காட்சியாக அவரது வீட்டில் திரையிடப்பட்டது.
இதுகுறித்து அரிராம் சேட்டின் மகன் கதிரேஷ் சேட் கூறுகையில், ''எங்கள் வீட்டில் மதுரை வீரன் படம் ஓடிய போது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த என்னுடைய தாயாருக்கு பிரசவவலி ஏற்பட்டு, என்னுடைய அக்காள் உதயரவி சந்திரிகா பிறந்தார். அவருக்கு உதயரவி சந்திரிகா என்று பெயர் சூட்டினாலும், மதுரை வீரன் படத்தின் கதாநாயகி பெயரான பொம்மி என்றே அக்காளை செல்லமாக அழைத்தனர்.
அந்தக் காலத்தில் நெல்லையில் திரையிடப்படும் சினிமா அன்றைய தினமே எங்கள் வீட்டிலும் ஓடும்" என்றார், கதிரேஷ் சேட்.
மேலும் அவருடைய தந்தையாரின் பெருமைகளை நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டார். "ஒருமுறை முக்கூடல் நாராயணசுவாமி கோவில் விழா கலை நிகழ்ச்சிக்காக சிவாஜியை என்னுடைய தந்தை (அரிராம்சேட்) அழைத்து இருந்தார். அப்போது, சம்பளம் குறித்து அவர் கறாராகப் பேசியிருக்கிறார். அதை என் தந்தை ஏற்றுக் கொண்டு சிவாஜிக்கு உரிய வசதிகளுடன் ஏற்பாடு செய்து முக்கூடலுக்கு வரவழைத்தார்.
சிவாஜி வந்தபோது, என் தந்தை அரிராம்சேட் அருகில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர் இருவரும் மிகச் சாதாரணமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் சிவாஜிக்கு ஏதோ மாதிரி இருந்திருக்கலாம். இவ்வளவு பெரிய மனிதரிடம் போய்க் கடுமை காட்டி விட்டோமோ? என்று எண்ணியிருக்க வேண்டும். பிறகு கலை நிகழ்ச்சியில் பாரதியார் வேடம் அணிந்து சிவாஜி நடித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு என் தந்தையிடம் அன்புடன் பேசி, சம்பளம் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
என் தந்தை ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் கார்களை உடனே வாங்கிவிடுவார். அவரிடம் கார், ஜீப்கள் என்று வாகனங்கள் நிறைய உண்டு. அதில் ஒரு ஜீப்பை சிவாஜி ஆர்வத்துடன் பார்த்து இருக்கிறார். அதைப் புரிந்துகொண்ட என் தந்தை, டிரைவரிடம் கண் அசைத்தார். அதன் பொருளைப் புரிந்துகொண்ட டிரைவர் ஜீப்பை எடுத்துக்கொண்டு அதிவேகமாக புறப்பட்டுவிட்டார். சிவாஜி சென்னைக்கு போவதற்கு முன்பாக அவரது வீட்டுக்கு ஜீப் போய் நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்கு நன்றி தெரிவித்து சிவாஜி, என் தந்தைக்கு கடிதமும் அனுப்பினார்.
தமிழ்நாட்டில் 1960-களில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக எம்.ஜி.ஆருக்கு என் தந்தை பிரசாரவேன் வாங்கிக் கொடுத்தார்" என்று கதிரேஷ் சேட் சொல்லிக் கொண்டே போனார்.