சல்மான் கானுக்கு ஒரே நாளில் 2 கொலை அச்சுறுத்தல்கள்!
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை அச்சுறுத்தல்கள் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
பிரபல இந்தி நடிகரான சல்மான் கானுக்கு மாபியா கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறி, ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. குண்டு துளைக்காத காரில்தான் அவர் பயணம் செய்கிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில், சல்மான் கான் மெஹபூப் ஸ்டுடியோவிலிருந்து அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், சல்மான் கானின் கான்வாய் காருக்கும் பாதுகாப்புப் போலீஸாரின் காருக்கும் இடையில் ஒருவர் பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். போலீஸார் எச்சரித்தும், அவர் விலகாமல், சல்மான் கானின் காரை நெருங்குவதைப் போலச் சென்றிருக்கிறார். சல்மான் கான் வீட்டை அடைந்த பின்னர், பைக்கில் வந்தவரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், அவர் கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது. அதிவேகத்தில் வாகனம் ஓட்டிய காரணத்தால் பிரிவு 125 மற்றும் 281 ஆகியவற்றின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவும் ஒருவகையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதே நாளில் சல்மான் கானின் தந்தை சலீம் கான், காலையில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் இரண்டு பேர் வந்துள்ளனர். ஸ்கூட்டரின் பின்னால் பர்தா அணிந்து அமர்ந்திருந்த பெண், சலீம் கானிடம் "லாரன்ஸ் பிஷ்னோயை அனுப்பி வைக்கட்டுமா" என்று மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார். சலீம்கான் அதற்கு பதில் அளிப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்களின் வாகன எண்ணை வைத்து, அவர்களைக் கண்டு பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் கேளிக்கைக்காக அப்படிச் செய்ததாகத் தெரிவித்துள்ளனர். கேளிக்கை செய்வது பிறரை தொந்தரவுக்குள்ளாக்குவது. அந்த அடிப்படையில் பிரிவு 292-ன் படி பொது இடங்களில் தொந்தரவு செய்தல் மற்றும் வேறு சில பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.