'சூப்பர் ஸ்டார் படம் அப்படி ஓட வேண்டிய அவசியம் இல்லை' - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு

லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.;

Update:2024-02-05 23:51 IST

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லால் சலாம்' திரைப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் நடித்து இருக்க மாட்டார்' என்று தெரிவித்து இருந்தார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து உள்ளார். அவர் பேசியதாவது, 'லால் சலாம் படம் அரசியல் பேசுகிறதா என்றால்.. ஆம் இந்த படம் மக்கள் சார்ந்த அரசியலை பேசுகிறது. அரசியல் இல்லாமல் யாரும் இல்லை எதுவும் இல்லை. அது நம் பார்வையைப் பொறுத்து மாறுகிறது.

நான் இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசுவேன் என்பது அப்பவிற்கு தெரியாது. நான் பேசியது படத்தின் புரோமொஷனுக்காகவா என சிலர் அப்பாவிடம் விமான நிலையத்தில் வைத்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு சின்ன விளக்கமளிக்க விரும்புகிறேன். என் மூலமாகவோ அல்லது பல புரோமொஷன் யுகதிகளை கையாண்டு சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி செய்துதான் படம் ஓட வேண்டிய தேவையுமில்லை.

எந்த மாதிரியான ஒரு அரசியலும் பேசாத படம் ஜெயிலர். அது வெற்றி படமாக அமைந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னையும் சரி, என் சகோதரியையும் சரி, எங்களின் சொந்த கருத்துரிமையை ஊக்குவிக்கும் ஒருவர் அப்பா. அவரிடம் அப்படியொரு கேள்வி எழுப்பியது கஷ்டமாக இருந்தது' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்