ஆப்பிள் நிறுவனத் தலைவரை சந்தித்த சித்தார்த் - அதிதி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஆப்பிள் அறிமுக வெளியீட்டு விழாவில் திரைக் கலைஞர்கள் சித்தார்த்தும் அதிதி ராவும் கலந்துகொண்டனர்.;

Update: 2024-09-10 16:23 GMT

அமெரிக்கா,

உலகின் பிரபலமான ஆப்பிள் நிறுவனம், நேற்று தனது நியூ மாடல் ஐ போன் சீரிஸ், வாட்ச் சீரிஸ், ஏர் பாட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கான அறிமுக வெளியீட்டு விழா 'இட்ஸ் க்ளோடைம்' என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் பங்கேற்று ஆப்பிள் நிறுவத் தலைவரும் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.



அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சித்தார்த் தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பகிர்ந்து, "மறக்க முடியாத மேஜிக்கல் அனுபவத்தை கொடுத்த டிம் குக்கிற்கு நன்றி. வியப்பூட்டும் வகையில் எங்களை சுற்றி புதிய தொழில்நுட்பங்களும், சிறந்த படைப்பாற்றல்களும் இருந்தன. அதனால் எங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.   

நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.அதிதி ராவ் செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிட்சயமானவர்.

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. சித்தார்த்தும் அதிதி ராவும் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். 



Tags:    

மேலும் செய்திகள்