சூர்யா - கார்த்தியை சந்தித்த நடிகர் டொவினோ தாமஸ்
மலையாள நடிகர் டோவினோ தாமஸ், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டோவினோ தாமஸ் நெகிழ்ந்துள்ளார்.;
சென்னை,
நடிகர் கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் படத்தை '96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 'யு' தணிக்கை சான்றிதழ் பெற்று நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படக்குழுவிற்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், சூர்யா மற்றும் கார்த்தியை சந்தித்து 'மெய்யழகன்' படத்திற்கு தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொவினோ தாமஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் நடிகராக வேண்டும் என நினைத்த காலத்தில் இருந்தே இவர்களை பார்த்துதான் ஊக்கம் பெற்றேன். இப்போது இவர்களுக்கு நடுவில் நிற்கிறேன். எனது திரைப் பயணத்தில் இவர்களின் பங்கு முக்கியமானது. மெய்யழகன் படத்திற்கு வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டொவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். டோவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஏ.ஆர்.எம் படம், 13 நாட்களில் உலகளவில் ரூ.87 கோடி வசூலைக் கடந்துள்ளது.