பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தன்னையும், குழந்தைகளையும் வீட்டுக்குள் விட நவாசுதீன் சித்திக் மறுப்பதாக அவரது முன்னாள் மனைவி ஆலியா சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நவாசுதீன் சித்திக் முன்னாள் மனைவி ஆலியா மற்றும் தனது தம்பி சமாசுதீன் சித்திக் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
தன்னை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து கூற ஆலியா மற்றும் சமாசுதீன் சித்திக்கிற்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் எனவும், எழுத்துப்பூர்வமாக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நவாசுதீன் சித்திக் மனுவில் கூறியுள்ளார்.
மேலும் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சமாசுதீன் சித்திக்கை 2008-ம் ஆண்டு எனது மேலாளராக நியமித்தேன். அவரை நம்பி பணப்பரிவர்த்தனை பொறுப்புகளையும் ஒப்படைத்தேன். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அவர் தன்னிடம் மோசடியில் ஈடுபட்டு, அந்த பணம் மூலம் சொத்துக்களை வாங்கினார். இது தெரியவந்தவுடன் நான் அவரிடம் கேட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் எனது முன்னாள் மனைவி ஆலியாவை எனக்கு எதிராக புகார் அளிக்க தூண்டினார்.
ஆலியா மற்றும் சமாசுதீன் சித்திக் என்னிடம் இருந்து ரூ.21 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதை திருப்பி கேட்டதால் அவர்கள் என்னை பற்றி மலிவான வீடியோக்கள், கருத்துகளை சமூகவலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை வருகிற 30-ந் தேதி நீதிபதி ரியாஸ் சாக்லா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது.