சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
சென்னை,
நடிகர் கமல்ஹாசனின் மூத்த அண்ணன் சாருஹாசன்(வயது 96). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். மகேந்திரன் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான 'உதிரிப்பூக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாருஹாசன். இவர் கடைசியாக விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மோகன் நடித்த ' ஹரா' படத்தில் நடித்துள்ளார்.
தற்போது இவர் வயது மூப்பின் காரணமாக திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாருஹாசனின் மகளான சுஹாசினி அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து தன்னுடைய தந்தையை கட்டி அணைத்தபடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் பகிர்ந்துள்ள பதிவில், 'இதை விடுமுறை என்பதா? அல்லது தந்தையின் மருத்துவநிலைக்காக அவருடன் தங்கியுள்ளேன் என்பதா? மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவரது மகள்களின் அன்பாலும், அரவணைப்பாலும் நன்றாக குணமடைந்து வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.