'தங்கலான்' படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை கோரி வழக்கு

தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-10-07 11:19 GMT

சென்னை,

பா ரஞ்சித் இயக்கியிருக்கும் 'தங்கலான்' படத்தில் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கேல்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக சிறப்பாக அமையவில்லை.

இந்தநிலையில், தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இப்படம் விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அவ்வாறு வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தங்கலான் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்