குஜராத்தி படத்தை தயாரிக்கும் நயன்தாரா
விக்னேஷ் சிவனுடன் இணைந்து குஜராத்தி மொழி படமொன்றை தயாரிக்க இருக்கிறார் நயன்தாரா.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார். நயன்தாரா தயாரித்த கூழாங்கல் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றது. தொடர்ந்து ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு விருது பெறாமல் திரும்பியது. தற்போது இந்தி பட உலகிலும் நயன்தாரா அறிமுகமாகி உள்ளார். அட்லி இயக்கும் லயன் இந்தி படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கிறார். அடுத்து குஜராத்தி சினிமாவிலும் கால்பதிக்கிறார்.
காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து குஜராத்தி மொழி படமொன்றை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சைனி டைரக்டு செய்கிறார். இதில் மல்ஹர் தக்கார், மோனல் கஜார் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு சுப் யாத்ரா என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் குஜராத்தி ரீமேக்காக இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.